யு.கே.ஜி படிக்கும் என் பையன், காலையில் படுக்கையை விட்டு எழும் போதே....அம்மா... அம்மா....
அது எங்கம்மா? காணம்......நான் ராத்திரி தூங்கும் போது கையிலே வச்சுகிட்டு ....தூங்கினேனே....அது எங்கமா...எனக்கு வேனும் என்று ஒரே அழுகை... எனக்கு ஓன்றுமே புரியவில்லை.
என்னடா எதை வச்சுகிட்டு தூங்கினே? நல்லாபாரு இருக்கும்...என சொல்லி விட்டு சமையல் அறைக்குள் நுழைந்தேன்.
காலை 10 மணிக்குள் ஆபிஸ் போக வேண்டிய அவசரம் எனக்கு...
அவன் மறுபடி சமயலறைக்கு வந்து... அம்மா அம்மா.... பிளிஸ்மா.. நான் நேத்து ஸ்கூலில் இருந்து வரும் போது ...எடுத்துட்டு வந்தேனே...இப்பிடி......இப்பிடி நிட்டிகிட்டு..பஞ்சு மாதிரி இருந்துச்சே,அதுதாம்மா.அது எனக்கு இப்பவே ...வேணும்.......என்று பிடிவாதமாய் என்னை இழுத்துச் சென்று...கட்டிலில் கிடக்கா எனத் தேடச் சொன்னான்...கூடவே ஒரே அழுகை.
எனக்கு காலை அவசரத்தில் ...கோவம் கோவமாய் வந்தது.. ஏண்டா ... காலையில இப்படி என் உயிரை எடுக்கிற...பெரிய பொக்கிஷத்தை பறி கொடுத்த மாதிரி...என்று திட்டி இரண்டு அடி கொடுத்தேன்...அப்பவும் விடுவதாய் இல்லை...
ஸ்கூல் போகும் வரை தேடிக் கொண்டே இருந்தான்...சுத்தமாய் சாப்பிடவில்லை..
எனக்கு ஒரே ஆச்சிரியம். இவன் எதை தேடுகிறான் என்று. அவன் ஸ்கூல் போன பிறகு கட்டில் மெத்தையை தட்டி சரிபடுத்தினேன். ஏதாவது இருக்க என ஆராய்ந்தேன். ஒன்றும் இல்லை. ஆபிஸில் கூட அதே ஞாபகம்..
பையன் எதை தேடி இருப்பான் என்று...சே...அடித்து விட்டோமே என்ற வேதனை ஒருபக்கம். மாலை ஆபிஸ் விட்டு வந்தவுடன்...அம்மா......அம்மா.....அது...கிடைச்சிருச்சு...
பெட்டுக்கு அடியில் கிடந்தது.. என்று சொல்லி அவ்வளவு ஆனந்தமாய், பெரிதாய் சிரித்துக் கொண்டே...ஓடி வந்து..என்னிடம் காட்டினான்....அது...அது..அது வந்து...................
“மைனா குருவியின் அழகிய சிறகு”